அரசியல் கைதிகள் விடயத்தில் தீர்வின்றி ஜனாதிபதி நிகழ்வை புறக்கணிப்போம்– கஜேந்திரன்

“அரசியல் கைதிகள் விடயத்தில், நாளை மறுதினத்துக்கு முன் தீர்வு கிடைக்க வேண்டும். இல்லையேல், எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ள நிகழ்வை புறக்கணிக்குமாறு கோருவதுடன் எதிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபடுவோம்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“16 நாட்களாக அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது. அவர்களுக்கு ஆதாரவான போராட்டங்களும் தொடர்கின்றன. கைதிகளின் உடல் நிலை தொடர்பிலான அறிக்கைகள் இதுவரை வெளியிடப்படவில்லை. சிறைச்சாலை அதிகாரிகள் கூட கரிசனை இல்லாமல் உள்ளனர்.

உண்ணாவிரதமிருக்கும் இந்த கைதிகள் பிணையோ விடுதலையோ கோரவில்லை. தமது வழக்கை வவுனியா நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என்றே கோரிக்கை விடுக்கின்றனர்.

சாட்சியத்துக்கு அச்சுறுத்தல் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. யுத்தம் முடிவடைந்து நாடு பாதுகாப்பாக உள்ளது என தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், சாட்சிக்கு யாரால் அச்சுறுத்தல் உள்ளது என்பதனை வெளிப்படையாக கூறவேண்டும். யாழ்ப்பாணத்துக்கு, சனிக்கிழமை (14) ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டால் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.

நாளை மறுதினம் (13) இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு அனைவரின் ஒத்துழைப்பையும் கோருகின்றோம். அத்துடன் அன்றைய தினம் வடமா காண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படவுள்ளது. அதற்கும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.

13 ஆம் திகதிக்கு முன்னர் சாதகமான பதில் கிடைக்கவில்லை எனில் 14ஆம் திகதி யாழில் நடக்கும் நிகழ்வை புறக்கணிக்குமாறு கோருவோம். அதனையும் மீறி யாழுக்கு வருகை தந்தால் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *