அஸ்கர் கவிதை

தொ(ல்)லை பேசி…..?

சாண் ஏற முழம் சறுக்குவது போல்
சரித்திரச் சாதனைகள் புதைந்துப் போய்
ஓர் இரும்புத் துண்டுக்கு இரையாகி
நோக்கம் மறந்து தத்தளிக்கும் எம் இளமைகள்…..

வடங்கள் காவி வந்தச் சொல்
வண்டுகள் இரையும் ஓசைப் போல்
ஓயாது வந்து செவியோரம்
அழைப்பில் காத்திருக்கும் இம்சைகள்…

அஞர் எனும் பெருந்துயரம்
விரலசைவில் உறங்காமல் துடிக்கிறது
நள்ளிரவில் விழிகளிரண்டும் தவம் செய்து
தலைவலித் தொல்லையை விதியாக்குகிறது.

முகப்புத்தகத்தில் இன்னும் போராட்டம் அதிகம்
உள்ளத்தில் பேழ்கணித்தல் சிறிதுமில்லை
வையகத்தில் எதைத்தான் நம்ப
தொலைபேசிக்குள் நாடகமேறுகிறது சபலச் சிந்தனைகள்.

இரத்தத்தால் சேர்ந்த பணம்
அட்டை சுரண்டி காசு தின்று
அட்டை இரத்தம் குடிப்பது போல்
காணாமல் போகிறது உழைப்பு.

விட முடியா தொடர் குறுஞ்செய்தி
வண்ணாத்திப் பூச்சுகளின் சேர்க்கையிங்கே
மரணம் வரை கூட்டிச் சென்று
தள்ளிவிட்டச் செய்திகள் ஆயிரம் ஆயிரமே.

சிறிது சிறிதாய் சீற்றங்கள்
சிகரத்தை உடைத்து விடும் ஒருநாள்
அது போல் மெது மெதுவாய் உட்புகுந்து
வாழ்வின் வழிகளையே சீர்கெடுக்கும்.

தொலைபேசியில் தொந்தரவின் தொல்லைகள்
உணர்வுகள் அதற்குள் அடிமையாகி
ஊசி போல் நுனியில் குத்தும் சாவு
தொல்லை பேசிதான் பொருந்தும் நாமம்…
இறக்குவானை ஸ்டப்டன் தோட்டத்தைச் சேர்ந்த அப்துல் அலீம் முகமது அஸ்கர் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்றுக்கொண்டு வருகிறார். கவிதையிலும் வாசிப்பிலும் அதிக ஈடுபாடு கொண்ட இவரை வாழ்த்தி எதிர்காலம் இந்த இளம் படைப்பாளியின் கவிதையை வெளியிடுகிறது…
-ஆசிரியர்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *