இலங்கையின் முடிவால் தமிழக மீனவர்கள் அதிருப்தி

இராமேஸ்வரம் முதல் நாகை, புதுச்சேரி மீனவர்கள் பாக்கு நீரிணை, வங்க கடலில் மீன்பிடிக்கின்றனர். 2009ம் ஆண்டுக்கு பிறகு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து படகை சிறைபிடிக்கின்றனர்.

இந்தநிலையில் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண ஒக்டோபர் 14ல் டெல்லியில் இந்திய, இலங்கை மீன்துறை அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் மீனவர்கள், படகுகளை விடுவிக்கவும், மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடிக்க ஊக்கப்படுத்துவது என தீர்மானித்தனர்.

ஆனால் பேச்சுவார்த்தை முடிந்த 24 மணி நேரத்திற்குள் நேற்று கொழும்பில், எல்லை தாண்டும் தமிழக மீனவருக்கு ரூபாய் 6.75 கோடி அபராதம் விதிக்கப்படும் என இலங்கை மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு வௌியிட்ட அறிவிப்பு, இந்திய மத்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அந்த அமைச்சு கூறியதாவது:

இலங்கை எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்து படகை சிறை பிடித்ததால், மீனவர்கள் ஊடுருவல் கட்டுபடுத்தி உள்ளோம்.

இந்தநிலையில் எல்லை தாண்டும் மீனவர்களின் ஒரு படகிற்கு ரூபாய் 150 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூபாய் 6.75 கோடி) அபராதம் விதிக்க முடிவு செய்து, இதற்கான திருத்தப்பட்ட மசோதா பாராளுமன்றத்தில் ஒரிரு வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது, என்றார்.

இதுகுறித்து இந்திய, இலங்கை நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான பிரதிநிதி யூ. அருளானந்தம் கூறுகையில்,

´´ஏற்கனவே தமிழக மீனவர் படகிற்கு ரூபாய் 4.50 கோடி அபராதம் விதிக்க முடிவு செய்தது அதிர்ச்சியளித்த நிலையில், தற்போது ரூபாய் 6.75 கோடி அபராதம் விதிக்க மசோதாவில் திருத்தம் செய்ய உள்ளனர்.

இதனால் தமிழக மீனவர்களை அழிக்க இலங்கை அரசு திட்டமிடுகிறது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும்,´´என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *