கனவு நனவாகிறது…!

ஸ்பெயினின் தன்னாட்சிப் பிரதேசமான கேடலோனியாவைச் சேர்ந்த மக்கள் தனி நாடாகப் பிரிந்து செல்ல கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் பங்கேற்றனர். கேடலோனியா பிரிவதை விரும்பாத ஸ்பானிய அரசு, அந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பையே தேசிய காவல் துறை உதவியுடன் தடுத்து நிறுத்தியதுடன் கேடலோனியா பகுதிகளில் மக்கள் மீது தடியடி நடத்தியும் வாக்குப் பெட்டிகளைப் பறித்தும் அடக்குமுறையைக் கையாண்டது.

எதிர்ப்பேதும் தெரிவிக்காத மக்களைக் காவல் படையினர் குண்டாந்தடிகளால் சகட்டு மேனிக்குத் தாக்கினர். பெண்களைக் கைகளைப் பிடித்தும் தலைமுடியைப் பிடித்தும் இழுத்து அப்புறப்படுத்தினர். 800-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அதேசமயம், கேடலோனியா பகுதி காவலர்கள், மக்களோடு மக்களாக நின்றுகொண்டனர். அவர்கள் மக்களையும் அடிக்கவில்லை, தேசியக் காவல் படையினருடனும் சேர்ந்துகொள்ளவில்லை.

ஸ்பெயினின் அடக்குமுறை

தொழில்வளம் மிக்க கேடலோனியா பகுதி மக்களின் மனக்குறைகளைத் தீர்க்காமல் அலட்சியப்படுத்தி வந்த ஸ்பானிய அரசு, தனது அடக்குமுறையால் நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே ஐந்தாவது பெரிய நாடான ஸ்பெயினில் இப்போது சமூக, அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. கேடலோனியா பகுதி தனி நாடாகப் போகலாமா, ஸ்பெயினுடனேயே சேர்ந்து இருக்கலாமா என்று கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த கேடலோனியா பிரதேச நாடாளுமன்றம் முடிவு செய்தது.

அதை கேடலோனியா பிரதேச அரசு நிர்வாகம் ஆதரித்தது. இதையடுத்து ஸ்பெயின் அரசு எதிர் நடவடிக்கைகளைத் தொடங்கியது. இப்படிக் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதே சட்டவிரோதம் என்று அறிவித்தது ஸ்பெயின் உச்ச நீதிமன்றம். பிரதமர் மரியானோ ரஜாய் தலைமையிலான ஸ்பெயின் அரசு தனிநாடு பிரச்சாரத்தை முழு மூச்சாக ஒடுக்க முற்பட்டது. கருத்தறியும் வாக்கெடுப்பு இயந்திரங்களையும் பிற சாதனங்களையும் பறிமுதல் செய்தது. சுதந்திரத்தை வலியுறுத்திய இணைய தளங்களை முடக்கியது. பிரிவினையை முழு பலத்தோடு ஒடுக்குவோம் என்று எச்சரித்தது.

பதற்றங்களின் வரலாறு

ஸ்பெயினிலேயே பிரிவினை கோரி வன்செயல்களில் ஈடுபடும் ‘பாஸ்க்’ அமைப்பு குறித்து உலகம் அறியும். ஆனால் கேடலோனியா பிரதேசத்துக்கும் ஸ்பெயினுக்குமான உரசல்கள் வெளியுலகின் கவனத்தை ஈர்த்ததில்லை. ஸ்பெயினின் வட கிழக்கில் உள்ள கேடலோனியா தொழில்வளம் மிக்க பகுதியாகும். ஸ்பெயினின் பொருளாதார வலிமைக்கு இந்தப் பிரதேசத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் பொருளாதார, கலாச்சார, சமூக, மொழி அடிப்படையிலான உரசல்கள் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து வந்துள்ளன.

கேடலோனியாவின் சுயாட்சி மாகாண கோரிக்கையை ஸ்பெயின் நாடாளுமன்றமே 1932-ல் ஏற்றுக் கொண்டது. ஆனால் ஸ்பெயினில் ஆட்சிக்கு வந்த சர்வாதிகாரி ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோ காலத்தில் கேடலோனியாவின் தனி நாடு கோரிக்கையாளர்கள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளானார்கள். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜனநாயக அரசு, கேடலோனியாவுக்கு அதிக சுயாதிகாரம் தேவை என்பதைக் கருத்தளவில் ஏற்று ஒப்புக்குச் சில அதிகாரங்களைப் பிரித்து வழங்கியது.

கேடலோனியாவின் சுதந்திரக் கிளர்ச்சியில் இடதுசாரிகளுடன் வலதுசாரிகளும் கைகோத்துச் செயல்படுகின்றனர். சுதந்திரம் கிடைக்குமா என்ற சந்தேகம் நிலவியபோதிலும் கருத்துக் கணிப்பு நடத்தியே தீர வேண்டும் என்று அனைத்துத் தரப்பும் உறுதியாக இருந்தன. 2007-ல் ஸ்பெயின் மிகப்பெரிய நிதி நெருக்கடியைச் சந்தித்தது. அப்போது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அரசு எடுத்தது.

அப்போது கேடலோனியாவில் கிடைக்கும் நிதியைக் கொண்டு பிற பகுதிகளை ஸ்பெயின் அரசு வாழவைக்கிறது என்ற குறை கேடலோனிய மக்களுக்கு ஏற்பட்டது. 2011, 2014 ஆகிய ஆண்டுகளிலும் சுதந்திரம் கோரி மக்களிடையே அதிகாரப்பூர்வமற்ற வகையில் இரு கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. இரண்டிலும் சுதந்திரத்துக்கு ஆதரவாகத்தான் மக்கள் வாக்களித்தனர்.

பிரிவினைக்கு எதிர்ப்பு

இந்நிலையில், பார்சிலோனாவில் வாக்களிக்கக் கூடியிருந்த மக்கள் மீது தேசிய போலீஸ் படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டு ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் இப்படியா அடக்குமுறையை ஏவுவார் என்று பல ஐரோப்பிய நாடுகள் வியப்பு தெரிவித்துள்ளன. ஆனால் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில், கேடலோனியா பிரிந்து செல்லக் கூடாது என்று வலியுறுத்தி ஏராளமானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஸ்பானிய அரசு பிரிவினைவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். ஸ்பெயினின் தேசியப் பத்திரிகைகளும்கூட பிரிவினைக்கு எதிராகவே எழுதின. தங்களுடைய கருத்துக்கு ஆதரவாக அரசியல் சட்டத்தை அவை மேற்கோள் காட்டின. பிரிவினைவாதிகளுடன் அரசு பேச வேண்டும் என்ற நடுநிலையாளர்களின் கோரிக்கைகளை நிராகரித்த தேசியப் பத்திரிகைகள், ஆட்சியைக் கவிழ்க்க நினைப்பவர்களுடன் அரசால் பேச முடியாது என்று எழுதின.

சுதந்திர நாடு கோரிக்கைக்கு 90% மக்களுடைய ஆதரவு இருப்பதாக கேடலோனிய அரசு அறிவித்துள்ளது. கேடலோனியர்களின் கோரிக்கையை மத்திய ஸ்பானிய அரசு ஏற்பதற்குத் தயாரில்லை என்பதால் இனி மோதல்களும் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் வழக்கமாகிவிடும் என்று தெரிகிறது. இது ஸ்பெயினின் பொருளாதாரத்துடன் ஐரோப்பியப் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

சுமுகமாகக் கையாள வேண்டிய இந்த விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க விரும்புகிறார் பிரதமர் ரஜோய். ஸ்பெயின் நாட்டு அரசியல் சட்டத்தின் 155-வது பிரிவின் கீழ் நெருக்கடி நிலையை அறிவித்து, கேடலோனிய பிரதேச அரசின் நிர்வாகத்தை ஸ்பெயினின் மத்திய அரசே தன்னுடைய கைகளில் எடுத்துக்கொண்டுவிடும் என்று தெரிகிறது. பெல்ஜியம், ஸ்காட்லாந்து நாடுகளிலிருந்து மட்டும் ரஜோயின் நடவடிக்கைக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இதை ஸ்பெயினின் உள்நாட்டு விவகாரம் என்று கூறி வருகின்றன. ரஜோய் இன்னொரு பிராங்கோவாக உருவாகி வருகிறார் என்கிறார்கள் கேடலோனிய ஆதரவாளர்கள்!

தி இந்து ஆங்கிலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *