தாய்வான் அதிகாரிகள் இலங்கை வருகை

தாய்வான் வங்கியொன்றின் கணினிக் கட்டமைப்பில் ஊடுருவி 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அந்நாட்டின் அதிகாரிகள் நேற்று (11) இரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இருவரும் வங்கி அதிகாரி ஒருவரும் விசாரணைகளை மேற்கொள்ள வருகை தந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.

அவர்கள், இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரவினருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தாய்வானின் ஃபா ஈஸ்டர்ன் இன்டர்நெஷனல் வங்கியிலிருந்து கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தொகைப் பணத்தில் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கையிலுள்ள மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கை உட்பட, கம்போடியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தாய்வான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமது வங்கிக் கணக்குகளில் ஊடுருவி, கொள்ளையிடப்பட்ட பெருந்தொகைப் பணத்தை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் சுமார் 5 இலட்சம் அமெரிக்க டொலர் வரையில், இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஃபா ஈஸ்டர்ன் இன்டர்நெஷனல் வங்கி தெரிவித்துள்ளது.

கணினிகளுக்குத் தீங்கிழைக்கும் வைரஸ்கள், தமது நிறுவனத்தின் கணினிகளுக்குள் பரவியுள்ளமை தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்தப் பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பில், சர்வதேச குற்றவியல் பொலிஸாரின் உதவியை நாடுவதற்கு தாய்வானின் நிதி முகாமைத்துவ ஆணைக்குழுவும் குற்றப் புலனாய்வுப் பணியகமும் தீர்மானித்துள்ளன.

அத்துடன், தாய்வானின் தகவல் பாதுகாப்புப் பொறிமுறையை உறுதிப்படுத்தி, விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, அந்நாட்டுப் பிரதமர் லேய் சிங் டே உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தப் பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பில் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் என்.எம்.எஸ். முனசிங்க உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, இது பற்றிய விசாரணைகளை மேற்கொள்ள தாய்வான் நாட்டு அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *