தோட்டத் தொழிலாளி என் நண்பன் எனப் பாடு….

மழை எப்பொழுதும் பெய்து கொண்டிருக்கும், இரத்தம் குடிக்கும் அட்டைகள் உடலில் எப்பகுதியிலாவது ஊர்ந்து சத்தமின்றி எவ்வித அரவமின்றி மக்களின் இரத்தத்தை குடித்துக் கொண்டிருக்கின்றன. அதனை அறியாத தோட்டத் தொழிலாளர்கள் கொட்டும் மழையிலும் ஏதோ ஒரு இயந்திரம் போல பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.. மழை, வெயில் எதுவும் அவர்களை ஒன்றும் செய்து விட முடியாது… செய்தும் என்ன செய்ய முடியும்… தோட்டத்தின் முதலாளிகள் விட வேண்டுமே விடுமுறை எடுத்துக் கொள்வதற்கு.. இப்படியான நிலைமையில் தான் மலையக மக்களின் வாழ்க்கை தொடர்கிறது…

ஒரு சாண் வயிற்றுக்கு பாடாய்ப்படும் அந்தச் சனங்கள் துயரமாகிப் போன வாழ்க்கையின் துயரத்தை மறைக்க தீபாவளி முற்பணமாக பத்தாயிரம் ரூபா கேட்டு களைத்து போய் இருக்கிறார்கள்.. ஊடகங்களின் முன் தலையில் அடித்து கதறுகிறார்கள்… இருந்தும் தோட்ட நிர்வாகங்கள் இரண்டாயிரம் தருகிறோம்.., மூவாயிரம் தருகிறோம் என கதை விட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த இடத்தில் தோட்டத் தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தில் மாடாய் உழைக்கும் பணத்தை பெற்று அரசியல் செய்யும் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் இதனை அறிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்கள்… மலையக மக்களின் சாபமாய் இருக்கும் தொண்டமான் குடும்பமும், அமைச்சர் திகாம்பரமும் இதர கட்சிகளும் மக்களை எப்படி ஏமாற்றி பிழைக்கலாம் என்பதை கொழும்பில் ரூம் போட்டு யோசித்து களமாடுகின்றன.. ஆனால் இந்த மக்களிற்கு அவர்கள் கேட்கும் முற்பணத்தை அவர்களின் உழைப்பில் பெருக்கும் தோட்ட நிர்வாகங்கள் கொடுக்க மறுத்து வருகின்றன… இந்த இடத்தில் இந்த தொழிற்சங்கங்களின் பணத்தில் வயிறு வளர்க்கும் அரசியல் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்… ஊடகங்களின் முன் தலையில் அடித்து கதறுகிறார்கள்… தங்கள் சந்தாப் பணத்தை எடுத்து புதிதாக கார் வாங்கி ஓட்டுமாறு வயிற்றெறிச்சலோடு வசை பாடுகிறார்கள்… தீபாவளி முற்பணம் கேட்கும் இந்தச் சனங்களிற்கு கொடுக்காத நிர்வகங்களும், தொழிற்சங்கங்களின் தலைவர்களும் இந்தச் சனங்களின் உண்மையான கஸ்டத்தை அறிவார்களா…? ஏதிலிகள் போன்று இருக்கும் இவர்களிற்கு முதுலைகளான மலையக கட்சிகளை விட தமிழர் தரப்பில் எவரும் சிந்திப்பது கிடையாது… வட,கிழக்கில் உள்ள மக்கள் இவர்கள் குறித்து சிந்தித்திருப்பார்களா என்பதெல்லாம் கேள்வியே… அந்தச் சனங்களை ‘வடக்கத்தயான்… வயிற்றுக்குத்தை நம்பினாலும் வடக்கத்தயானை நம்பாதே’ என்றெல்லாம் குறுகிய சிந்தனைகளால் அந்தச் சனங்களை நினைக்க தவறி விட்டோம்… ‘கொட்டும் மழையின் மத்தியில், இரத்தம் உறிஞ்சும் அட்டைக் கடியின் மத்தியில் கொழுந்து பறிக்கும் ஒவ்வொரு தோட்டத் தொழிலாளியும் என் நண்பன்’ எனும் கோட்பாட்டில் வாழ்ந்து என்னைப் போன்று இங்குள்ள ஒவ்வொரு சனங்களும் அதனை நினைக்க வேண்டும்… தோட்டத்தொழிலாளியின் பிரச்சினைகளின் அடிப்படைகளை எதிர்காலம் எவ்வித மறைப்புமின்றி வெளியிடும் தோட்டத் தொழிலாளி மேம்பட தொடர்ந்து பாடுபடுவோம் தோழர்களே… விடுதலை பெறட்டும் என் மலையக நண்பர்கள்;…
-ஆசிரியர்- 12.10.2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *