நியூயோர்க் தாக்குதலில் இலங்கையர் பாதிப்படைந்ததாக தகவல் தெரியவரவில்லை

நியூயோர்க் நகரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் எந்தவொரு இலங்கையருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் தெரியவரவில்லை என, வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதலால் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டார்களா என்பது குறித்து தூதுவராலய அதிகாரிகள் ஊடாக தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக, அந்த அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் உலக வர்த்தக மையம் உள்ளது. இதனருகே பாடசாலையும் செயல்பட்டு வருகிறது.

நேற்று மதியம் அந்த பள்ளியின் அருகில் பொதுமக்கள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் லொரி ஒன்றை வேகமாக ஓட்டி வந்தார். அந்த பாதையில் நடந்து கொண்டிருந்த மக்கள் மீது வேகமாக மோதினார்.

மேலும், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அப்பகுதியில் நடமாடியவர்கள் மீது சரமாரியாக சுட தொடங்கினார்.

இந்த திடீர் தாக்குதலில் 8 பேர் பலியாகினர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்தனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அப் பகுதிக்குச் சென்ற பொலிஸார் தாக்குதல் நடத்திய ஆசாமியை மடக்கி பிடித்தனர்.

அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், மன்ஹாட்டனில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், நியூயோர்க் பொலிசாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது நிர்வாகம் செய்து தரும். அவர்களுடன் இணைந்து செயல்படவும் தயாராக உள்ளோம். இதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *