நூலகங்கள் தட்டுமுட்டுச் சாமான்களைப் போடும் இடம் அல்ல!

னிதவள ஆற்றலைப் பெருக்க பள்ளி, கல்லூரிகள் எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு நூலகங்களும் அவசியமானவை. ஆசிரியர்கள் இல்லாமல் எப்படிக் கல்வி நிறுவனங்கள் சரியாக இயங்க முடியாதோ அதுபோல நூலகர் இல்லாமல் நூலகங்களும் இயங்க முடியாது. ஆனால், இன்று தமிழகத்தில் பொது நூலகங்களும் அவற்றில் பணியாற்றும் நூலகர்களும் அரசின் புறக்கணிப்புக்கு உள்ளாகியிருப்பது வேதனைக்குரியது.

தமிழ்நாடு பொது நூலகங்கள் இயக்ககத்தின் கீழ் 4,603 நூலகங்கள் இருக்கின்றன. மாநில, மாவட்ட நூலகங்கள், கிளை நூலகங்கள் என்று பல்வேறு நூலகங்கள் இவற்றுள் அடங்கும். இந்த எண்ணிக்கை தெரிவிப்பது யாதெனில், நாடிநரம்புகளைப் போல நூலகங்கள் தமிழ்நாட்டில் வேர்விட்டு வளர்ந்திருக்கின்றன என்பதே. இவை போக அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அனைத்துக் கிராமங்களிலும் 2006-ம் ஆண்டு முதல் 12,522 நூலகங்கள் தொடங்கப்பட்டன. அவற்றில் 10,447 நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நூலகங்களில் பெரும்பாலானவற்றில் நூலகர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் 2,075 நூலகர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்று வழக்கு தொடரப்பட்டதன் விளைவாக, உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, காலியிடங்கள் நிரப்பப்பட்டுவருகின்றன. ஆனால், இந்தப் பணி நியமனங்கள் நூலகங்களின் தேவையை முழுமையாக பூர்த்திசெய்யக் கூடியதல்ல.

நூலகங்களின் அவசியத்தை அதிகம் உணர்ந்த அன்றைய சென்னை மாகாணம் 1948-ல் பொது நூலகச் சட்டம் இயற்றியது. பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியாத, ஆனால் எழுதப் படிக்கத் தெரிந்த ஆர்வமுள்ளவர்கள் தாங்களாகவே படித்து அறிவைப் பெருக்கிக்கொள்ள அரசு அமைத்த நூலகங்கள் பயன்பட்டன. அவர்களில் பலர் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களாகவும் எழுத்தாளர்ச்களாகவும் இலக்கியவாதிகளாகவும் சிந்தனாவாதிகளாகவும் விளங்கியிருக்கிறார்கள் என்பது பொது நூலகங்களின் வெற்றி. இப்படிப்பட்ட பொது நூலகங்கள் குறித்தும் நூலகர்கள் குறித்தும் அரசு அலட்டிக்கொள்ளாமல் இருப்பது அவலம் இல்லையா?

ஆண்டுதோறும் புத்தகங்களை வாங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று அரசும் அதிகாரிகளும் நினைக்கின்றனர். அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டால் புத்தகங்கள் வாங்குவதற்கான நிதி குறைக்கப்படுகிறது. புத்தகங்கள் வாங்குவதிலும் ஒருசில பதிப்பகங்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது. இந்தக் குறைபாடுகள் தவிர்க்கப்பட வேண்டும். தரமான புத்தகங்களை, அவற்றின் பதிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தாத விதத்தில் உரிய விலை கொடுத்து வாங்க வேண்டும். எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்துறை அறிஞர்களைக் கொண்ட குழுவால் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களை மட்டுமே வாங்க வேண்டும்.

போதிய அளவு நூலகர்களை நிரந்தரமாக நியமிப்பதுடன் அவர்களுக்கு நியாயமான ஊதியத்தையும் வழங்க வேண்டும். நூலகர்களுக்கு உரிய பயிற்சிகளை அளிப்பதுடன் அவர்களையும் வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களாக்க வேண்டும். நூலகங்களுக்குப் பெண் வாசகர்களை ஈர்க்க மகளிராலேயே நிர்வகிக்கப்படும் தனி நூலகங்களைக்கூட தொடங்கலாம். பொது நூலகங்கள் சிறப்பாக இயங்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்தால்தான் வளமான அறிவுக் கலாச்சாரம் இங்கு பரிணமிக்கும். இல்லையெனில், நூலகங்கள் தட்டுமுட்டுச் சாமான்களுக்கான இடங்களாக மாறிவிடும் என்பதை அரசு உணர வேண்டும்!

————————————————  ஆசிரியர் தலையங்கம் -தி இந்து-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *