மட்டக்களப்பில் 95 வது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வு

மட்டக்களப்பு கூட்டுறவுவாளர்களின் 95 வது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச்சபைத் தலைவர் இராசதுரை ராஜப்பு தலைமையில் நடைபெற்றது.

கூட்டுறவே நாட்டு உயர்வு எனும் கருப்பொருளுக்கமைவாக மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

கூட்டுறவு அமைப்புக்களிடையே ஒத்துழைப்பு சமூகத்தின் மீதான கவனம் தன்னிச்சையான திறந்த அங்கத்துவப் பொருளாதார பங்குபற்றுதல் எனும் வேலைத்திட்டத்திற்கமைவாக முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தேசிய கூட்டுறவுத் தலைவர் லலித் ஏ.பீரிஸ் கலந்துகொண்டார்.

இங்கு 95வது கூட்டுறவு தின விழாவை முன்னிட்டு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற பேச்சு கட்டுரை கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை மாவட்டத்தில் சிறந்த சேவையாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்த தெரிவின் அடிப்படையில் முதலாவது இடத்தினை ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமும் 2வது இடத்தினை குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவி கூட்டுறவு சங்கமும் 3வது இடத்தினை மண்முனை மேற்கு கால்நடை கூட்டுறவுச் சங்கமும் பெற்றுக்கொண்டன.

இந்த நிகழ்விற்கு சிறப்பதிதிகளாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் வி.திவாகர சர்மா மற்றும் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.கனகசுந்தரம் ஆகியோருடன் மாவட்டத்திலுள்ள கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் செயலாளர்கள் அங்கத்தவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் மதத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *