மூலதனம்: பாகம் ஒன்று: 150 ஆண்டுகள்….

உலக முதலாளித்துவ அமைப்பில் சுரண்டப்படும் ஒரு நாட்டின் முதலாளித்துவச் செயல்முறையைப் புரிந்துகொள்ள ‘மூலதனம்’ முதல் பாகமும் மார்க்ஸின் பிற எழுத்துக்களும் நமக்கு அளிப்பது என்ன?

கார்ல் மார்க்ஸின் நூல் ‘மூலதனம்: முதல் பாகம்’ ஜெர்மனியிலுள்ள ஹம்பர்க் நகரில் வெளியாகி 2017 செப்டம்பருடன் 150 ஆண்டுகளாகின்றன. (முதல் பாகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1887இல்தான் முதன்முறையாக வெளியானது. வெளிநாட்டு மொழியில் முதன்முறையாக ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது 1872இல்.) உலக முதலாளித்துவ அமைப்பில் ஒரு சுரண்டும் நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சி முறையைப் புரிந்துகொள்வதற்காகப் பொருள்முதல்வாத இயங்கியல் முறை முதன்முறையாக வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக 1867இல் மூலதனம் வெளியானமை அரசியல், பொருளாதாரம், சமூக அறிவியல் துறைகளின் வரலாற்றில் முக்கியமான தருணம். செவ்வியல் அரசியல் பொருளாதாரத்திற்குத் தனது பொருள்முதல்வாத இயங்கியல் முறையைப் பயன்படுத்தி அதைப் பொருளாதாரச் சிந்தனை குறித்த விமர்சனமாக மாற்றினார் மார்க்ஸ். மூலதனம் நூலில் கோட்பாடும் இருக்கிறது, வரலாறும் இருக்கிறது. ஒன்று அருவமானது, மற்றொன்று திடமானது; இந்த இரண்டிற்கும் இடையே தவிர்க்கவியலாத பதற்றமும் இருக்கிறது. இது மார்க்ஸுக்கு நன்றாகத் தெரியும். இரண்டிற்கும் உரிய முக்கியத்துவத்தைத் தந்து, இரண்டிற்கும் மாறிமாறி அழுத்தம் தந்தார்.

மூலதனம் மூன்று பாகங்களைக் கொண்டது. முதல் பாகம் 1867இல் வெளியானது. இதன் திருத்தப்பட்ட பதிப்பு 1872இல் வெளியானது. இரண்டாம், மூன்றாம் பாகங்கள் மார்க்சின் மறைவிற்குப் பின்னர் பிரெடெரிக் எங்கெல்ஸால் முறையே 1885இலும் 1894இலும் வெளியிடப்பட்டன. மூலதனம் நூலில் மார்க்ஸின் முதலாளித்துவப் பகுப்பாய்வில்  ஓர் அமைப்பாக முதலாளித்துவம் எப்படி வரலாற்றில் உருவானது, செயல்பட்டது, அது எங்கு இட்டுச்செல்லும் என்பன போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. மதிப்பு, உபரி மதிப்பு, சுரண்டலின் விகிதம் (அல்லது உபரி மதிப்பின் விகிதம்), மூலதனத்தின் அங்கக இயைபு, லாப விகிதம், சார்பு உபரி மக்கள்தொகை (அல்லது தொழிற்துறை, தொழிலாளர், சேமப் படை) போன்ற தனது கருத்தாக்கக் கருவிகளின் உதவியுடன் மாற்றத்தை உருவாக்கும் வரலாற்றுச் சக்திகள், சமநிலையை நீடிக்கச் செய்யும் சக்திகள், இரண்டிற்கும் இடையிலான மோதல் எனப் பல முரண்பாடுகளை மார்க்ஸ் கண்டுபிடித்தார். இந்தக் கோட்பாட்டுக் கருவியைக்கொண்டு மூலதனத்தை வைத்திருக்கும்/கட்டுப்படுத்தும் வர்க்கம் தொழிலாளர்களைச் சுரண்டுவதைப் பகுப்பாய்வு செய்ய உழைப்புக் கோட்பாட்டை உருவாக்கினார். உபரி மதிப்பின் மூலத்தையும் அது அதிகரிக்கச் செய்யப்படும் முறைகளையும் கண்டுபிடித்தார்.

திரட்டல் பற்றிய பார்வையில் மாபெரும் ஆங்கிலச் செவ்வியல் அரசியல், பொருளாதார அறிஞரான டேவிட் ரிக்கார்டோவின் பார்வையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை மார்க்ஸ் வந்தடைந்தார். பொருளாதார நெருக்கடிச் சுழற்சிகள், லாப விகிதத்தின் வீழ்ச்சி, நுகர்விற்குத் தேவையானதை விட அதிகமாக உற்பத்தி செய்யும் போக்கு ஆகியவற்றிற்குப் பின்னால் இருக்கும் சக்திகளை வெளிப்படுத்திக் காட்டினார். அத்துடன் மூலதனத்தின் செறிவு எப்படி அதிகரிக்கிறது என்பதையும் மையத்தில் குவிக்கப்படுகிறது என்பதையும் எடுத்துக்காட்டினார். மார்க்ஸின் கருத்தில் முதலாளித்துவ இயங்கியலுக்கு உற்பத்தி, பணம் ஆகிய இரண்டும் மையமான அங்கங்கள். புரட்சிகரமானது என்று மார்க்ஸ் கருதிய பாட்டாளி வர்க்கத்தின் உருவாக்கமும் வளர்ச்சியும் இதன் ஓர் அங்கம். மார்க்ஸின் பகுப்பாய்வில் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்த இவை, ‘‘முதலாளித்துவத்துடன் இனியும் ஒத்திசைந்து இருக்க முடியாது என்ற நிலையை அடைகிறபோது உடைந்து சிதறுகின்றன’’, ‘‘முதலாளித்துவத் தனிச் சொத்துரிமைக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது. சொத்துக்களைப் பறிப்பவர்களிடமிருந்து சொத்துக்கள் பறிக்கப்படுகின்றன.’’ பாட்டாளிகள் புரட்சிகர வர்க்கமாக உருவெடுப்பதும் மூலதனத்தின் ஆட்சியைத் தூக்கியெறிவதும் மார்க்ஸின் பார்வையில் தவிர்க்கமுடியாதது. பொருள்முதல்வாத இயங்கியல் முறையைப் பயன்படுத்திய போதிலும் பொய்யான வரலாற்று நிர்ணயவாதத்தின் செல்வாக்கிற்கு ஆட்பட்டவராக மார்க்ஸ் இருந்தார். மார்க்ஸின் எழுத்து நடை அதைக் காட்சிகளாக விவரிக்கும் முறையில் பகட்டான தீவிர உணர்ச்சி உரையுடன் மூலதனத்தைக் குற்றம்சாட்டியது. உதாரணமாக, ‘‘மூலதனமானது இறந்துபோன உழைப்பு, ரத்தக்காட்டேரியைப் போல் உயிருடனுள்ள உழைப்பை உறிஞ்சி உயிர்வாழ்கிறது, அது எந்த அளவிற்கு உயிர்வாழ்கிறதோ அந்த அளவிற்கு உழைப்பை உறிஞ்சுகிறது,’’ போன்ற வரிகள் வாசகர்களைக் கட்டிப்போடுகின்றன; புரட்சிகர மாற்றம் வேண்டுமென்று அவர்களை உணரவைக்கின்றன. இந்த நோக்கமே அவரைப் புரட்சிகர மாற்றத்தின் வேகத்தை மிகையாகவும் இந்த மாற்றங்களுக்கான தடைகளைக் குறைத்தும் மதிப்பிட வைத்துவிடுகிறது.

ஆனால் மூலதனம் நூல் ‘அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கும்’ மேலானது. இது பொருளாதாரம், சமூகவியலின் மிக ஆழமான விளக்கமாகவும் இருக்கிறது. உதாரணமாக, சரக்கு வழிபாடு பற்றிய மார்க்ஸின் கருத்தை இப்படி விளக்கலாம்: இது எங்கே முடிகிறது என்று தெரிய வேண்டும். “சரக்குகளின் உலகில் பொருட்களுக்கிடையிலான உறவைப் போலவே தனிப்பட்ட உறவுகளும் திடப்படுத்தப்படுகின்றன.” என்னைப் போன்ற பழைய பஞ்சாங்கங்களுக்குச் செல்வத்தின் தோற்றுவாயானது மனித உழைப்பையும் இயற்கையையும் சுரண்டுவதில் இருக்கிறது என்பது அடிப்படையான உண்மை. சூழலியல் பிரச்சனைகள் பற்றிய மார்க்ஸின் அக்கறை நமது காலத்தின் சூழலியல், பொதுவுடைமையாளர்களின் அக்கறையைப் பிரதிபலிக்கிறது. சூழலியல், அமைப்புகளின் பார்வை என்று இப்போது அழைக்கப்படும், சமூகத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான வளர்சிதைமாற்றம் என்ற கருத்தாக்கத்தில் வேர்கொண்டுள்ள விஷயம் தொடர்பாகத் தனது காலத்தில் எடுக்கப்பட்ட சில முயற்சிகளின் செல்வாக்கிற்கு மார்க்ஸ் ஆழமாக ஆட்பட்டிருக்கிறார். ‘‘மண், தொழிலாளர்கள் என அனைத்து செல்வங்களின் மூலாதாரங்களையும் ஒரேநேரத்தில் பலவீனப்படுத்துகிறது முதலாளித்துவ உற்பத்தி,” என மூலதனம் முதல் பாகத்தில் மார்க்ஸ் எழுதியது சரியான காரணத்திற்காகவே. இது தவிர, முதல் பாகத்தின் எட்டாம் அத்தியாயமான ‘‘ஆதித் திரட்டல் என்றழைக்கப்படுவது’’ முதலாளித்துவம் எப்படி உருவானது என்பதை விளக்குகிறது. அடைப்புகளின் (Eclosure) மூலம் பிரிட்டனில் விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டதையும், அதைவிட முக்கியமாக உலக முதலாளித்துவ அமைப்பின் எல்லை என்று அறியப்படுவதன் சூழலியல் அழிவு உட்பட அப்போது நடந்த கொள்ளையையும் ‘‘முதலாளித்துவ உற்பத்திக் காலகட்டத்தின் நம்பிக்கையளிக்கும் விடியலை’’ காட்டியதாக மார்க்ஸ் விவரிக்கிறார்.

முதலாளித்துவ அரசு, வெளிநாட்டு வர்த்தகம், உலகச் சந்தை போன்ற ‘முதலாளித்துவப் பொருளாதார அமைப்பின்’ அங்கங்களைப் பற்றி மார்க்ஸ் முறையாக விரித்துரைக்கவில்லை. ஆகவே முதலாளித்துவத்தை ஓர் உலக அமைப்பு என்ற வகையில் அது குறித்த கோட்பாட்டுச் சட்டகம் எதையும் மார்க்ஸ் உருவாக்கவில்லை. உலக முதலாளித்துவ அமைப்பின் விளிம்பாக உருவாகவிருந்தவர்கள்மீது அப்போது உருவாகிக்கொண்டிருந்த முதலாளித்துவம் ஏற்படுத்திய விளைவை முதல் பாகத்திலுள்ள ‘ஆதித் திரட்டல் என்றழைக்கப்படுவது’ அத்தியாயத்தில் மார்க்ஸ் விவரிப்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். எந்திரங்கள், நவீனத் தொழிற்துறை பற்றிய அத்தியாயத்தில் நவீனத் தொழிற்துறையில் எந்திரங்களைப் பயன்படுத்துவதால் கிடைத்த சாதகத்தையும் காலனிய ஆதிக்கத்தையும் வைத்து ஐரோப்பிய அரசுகள், ‘‘தங்கள் ஆட்சியின் கீழிருந்த நாடுகளில் எல்லா தொழில்களையும் பலவந்த மாக அழித்துவிட்டன,’’ என்பதை மார்க்ஸ் காட்டுகிறார். முதலாளித்துவ உலக அமைப்பில் சுரண்டல் அடிப்படையிலான மைய – விளிம்புநிலை உறவுபற்றி மார்க்ஸ் அறிந்திருந்தார்.

கடந்த 150 ஆண்டுகளில் இந்த உலக – அமைப்பின் மையத்தில் முதலாளித்துவ வளர்ச்சியுடன் விளிம்பு நிலையின் வளர்ச்சிக்குறைவு என்ற நடைமுறை யதார்த்தத்தை ஒருவர் கணக்கில் எடுத்துக்கொண்டால் மூலதன நூலின் சட்டத்தில் பின்வரும் அம்சங்கள் பொருத்தமானவை.  ‘பாட்டாளி’ என்பது ஏழை விவசாயியையும் உள்ளடக்கியதாகும். தங்களது தொழிலின் லாபத்தை, தாங்கள் பயிரிடும் நிலத்தின் வாடகையைத் தங்களது கடன்களின் வட்டிகள் மட்டுமல்லாமல் தங்களது ‘கூலி’யின் ஒரு பகுதியையும் ‘முதலாளிகளுக்கு’த் தரவேண்டியிருப்பவர்கள் இந்த ஏழை விவசாயிகள். முறைப்படி வர்த்தக மூலதனத்தின் கீழ்வரும் சிறு உற்பத்தியாளர்கள் மட்டுமல்ல சிறு உற்பத்தியாளர்களாக இல்லாதபோதிலும், வர்த்தகத்தில் சமனற்ற பரிமாற்றத்தின் காரணமாகத் தாங்கள் உருவாக்கும் ‘உபரி’யைப் பெறமுடியாதவர்களும் ‘பாட்டாளி’ என்பதன்கீழ் வருகிறவர்களே.

பாட்டாளி வர்க்கமயமாதல் என்பது அதற்கான கண்டிப்பான பொருளில் மிகக் குறைவாக இருக்கும்போது செயலில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர் படையைவிட தொழிலாளர் சேமப் படை மிகப் பெரிதாக இருக்கிறது. இது முறையாக வேலையிலுள்ள தொழிலாளர்களின் கூலியையும் பிற கோரிக்கைகளையும் கட்டுக்குள் கொண்டுவருவதுடன் மிகக் கடுமையான போட்டி நிலவும், ஏராளமானவர்கள் போட்டியிடும், விநியோகம் சார்ந்த சந்தையில் சிறு உற்பத்தியாளர்களின் உற்பத்திப்பொருட்களின் விலையைக் குறைக்கும். இதுதான் உலக முதலாளித்துவ அமைப்பின் லாப அதிகரிப்புச் சக்தியை உயர்த்துகிறது. இதன் விளைவாக உருவாகும் பொருளாதார வறுமை வெகுமக்களின் வாங்கும் சக்தியைக் குறைக்கிறது. இது நுகர்வைக் குறைப்பதுடன் தேவைக்கு அதிகமானதை உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இது முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை ஒழித்துவிடுகிறது.
தலையங்கம், எகனமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, செப்டம்பர் 16, 2017

தமிழில்: திருநாவுக்கரசு

நன்றி : காலச்சுவடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *