‘மெர்சல்’ என்ற பெயரில் விளம்பரம் செய்ய உயர் நீதிமன்றம் இடைக்கால தடை…

‘மெர்சல்’ என்ற பெயரில் விளம்பரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, யோகிபாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மெர்சல்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

இந்நிலையில், ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தனது படத்தின் பெயரில் இருந்தே மெர்சல் என்ற பெயரை விஜய் படத்துக்கு வைத்துள்ளார். எனவே ‘மெர்சல்’ படத்தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று (செப்டம்பர் 22-ம் தேதி) விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வரும் அக்டோபர் 3-ம் தேதி வரை ‘மெர்சல்’ என்ற பெயரில் விளம்பரம் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மனு விவரம்:

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “நான் ஏ.ஆர்.ஃபில்ம் ஃபேக்டரி என்ற படத் தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளேன். தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். எனது மகனை நாயகனாக வைத்து இயக்க ஒரு கதை எழுதியுள்ளேன். அந்தக் கதைக்கு மெர்சலாகிட்டேன் எனப் பெயரிட்டுள்ளேன். இதை தயாரிப்பாளர் சங்கத்திலும் முறைப்படி பதிவு செய்துள்ளேன். அந்தப் படத்தை க்ரீன் ஆப்பிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இந்நிலையில் எனது படத்தலைப்பிலிருந்து ‘மெர்சல்’ என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு படத்தலைப்பை உருவாக்கியுள்ளனர். எனவே, மெர்சல் படத்தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், எதிர்மனுதாரர் (தேனாண்டாள் பிலிம்ஸ்) சார்பில் சதீஷ் பராசுரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி ‘மெர்சல்’ என்ற பெயரில் விளம்பரம் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

நவராத்திரி விடுமுறை காலம் என்பதால் அக்டோபர் 3-ம் தேதிக்கு வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *